திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். மாத செலவுகள், மருத்துவசெலவு, வாடகைக்கு இடைக்கால தொகையாக ரூ.2.80 லட்சம் வழங்கவும் நடிகை மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


முன்னதாக, நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக புகார் அளித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் மூன்று முறை தான் கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 


நடிகை சாந்தினியின் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சென்னை அடையாறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் மணிகண்டன் தலைமறைவானார். பின்னர், அவரை போலீசார் கடந்த ஜூன் 20ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.




இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை போலீசார் சென்னையில் இருந்து மதுரைக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


இதனைத் தொடர்ந்து, மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு அடையார் மகளிர் காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.


தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் சில காலம் அமைச்சராக இருந்த அவரை, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். பின்னர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.