வாகன கழிவுகளில் இருந்து கலை பண்பாட்டை வெளிக்கொணரும் சிலைகளை உருவாக்கி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை மாநகராட்சி வைத்து வருகிறது. சென்னை மாநகராட்சியில், குப்பையை தரம் பிரித்து கையாள, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குப்பையில் இருந்து எரிவாயு, இயற்கை உரம், நார் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் , துணி, மின் சாதன கழிவுகள், செருப்பு உள்ளிட்ட கழிவுகள், பிரித்து கையாளப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, வாகன கழிவுகளில் இருந்து, பயனுள்ள பொருட்கள் உருவாக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, வாகான பழுது மற்றும் உதிரி பாகங்களுக்கு பெயர்பெற்ற புதுப்பேட்டை மற்றும் பேசின் பிரிட்ஜில் உள்ள மாநகராட்சி வாகன பழுது நீக்கும் நிலையத்தில் இருந்து 15 டன் வாகன கழிவுகளை கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கைத்தேர்ந்த கலைஞர்களை கொண்டு கழுகு, மான், ஆமை, நண்டு, இறால், சுறா, சிறுத்தை, கடல்கன்னி, மீனவர் படகு, கப்பல் மாலுமி, ஜல்லிக்கட்டு வீரர், உழவர், மெல்லிசை கலைஞர், பரதநாட்டியம் ஆடும் பெண் உள்ளிட்ட 14 சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைகளை செய்யவும் மாநகராட்சி தரப்பில் இருந்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
வாகன கழிவுகளில் இருந்து சிலைகள் உருவாக்கும் பணியானது கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்றது. வாகன கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த சிலைகளை சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க சென்னை மாநகராட்சி முதலில் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா முதல் அலை பாதிப்பு துவங்கியதாலும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாகவும், இத்திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது, இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த சிலைகளை பொது இடங்களில் எங்கும் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது, கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சிங்கார சென்னை திட்டத்தின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை நடைபாதையில் உள்ள தலைவர்களின் சிலைகளான திருவள்ளுவர், பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளுக்கு அருகே சுறா, நண்டு, இறால் ஆகிய மூன்று சிலைகளை சென்னை மாநகராட்சி வைத்துள்ளது. உலோக கழிவுகளை கொண்டு உண்டாக்கப்பட்ட சிலைகளின் முன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
மெரினா கடற்கரையை போல் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்களை சென்னையில் உள்ள 15 இடங்களில் விரைவில் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார், திடக்கழிவு மேலாண்மையில் தனிகவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வரும் நிலையில் இந்த செயல்பாடு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.