திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு அறிவித்த மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை குறித்து அறிவிப்ப வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முதன் முதலில் முன்வைத்த அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது.


 






இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ந்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அசாம் தேர்தல் வரை இது எதிரொலித்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.


சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் தமிழகம், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவையில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அறிக்கையில் தெரிவித்த சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு அறிவித்த உரிமைத் தொகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.