ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷூக்கு தொடர்பிருப்பதாக கருதப்படும் நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வங்கி கணக்கை முடக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளனர். 


ஆருத்ரா கோல்டு நிறுவனம்


சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்களிடம் பணம் முதலீடு செய்பவர்களுக்கு, 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்தது. அதன்மூலம் சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், ஆருத்ரா நிறுவன இயக்குநர் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். 


இந்த வழக்கில் இதுவரை மோகன்பாபு, செந்தில்குமார், பாஸ்கர், அய்யப்பன், ரூசோ,பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி என அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் மதிப்பில் இதுவரை ரூ.5.69 கோடி பணமும், 1.13 கோடி மதிப்பிலான  தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நிறுவன வங்கிக்கணக்கில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் ரூ.97 கோடிக்கான அசையா சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.  


சிக்கிய ஆர்.கே.சுரேஷ்


இதற்கிடையில் ரூசோ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல நடிகர், தயாரிப்பாளர், பாஜக பிரமுகர் என பன்முகம் கொண்ட ஆர்.கே.சுரேஷூக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து பாஜக நிர்வாகி ஹரீஷை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்பட்டது. ஆர்.கே.சுரேஷ் புதிதாக தயாரிக்கும் படத்திற்காக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. 


இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷூக்கு பணபரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஆஜராகவில்லை. இதனை எதிர்த்து அவர் சார்பில் தொடரப்பட்ட மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் பொருட்டு  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி வங்கிகளுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.