திரை, சின்னத்திரை சேர்ந்த நட்சத்திர தம்பதிகளான சந்திரமௌலி & அஞ்சனா ரங்கன் இணையவழி துன்புறுத்தலை சந்திப்பதாக தமிழக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.


கயல் திரைப்பட நடிகரான சந்திரமௌலி, சின்ன திரை நடிகையான தனது மனைவி அஞ்சனாவிற்கு தொடர்ந்து தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளம் மூலமாக மோசமான குறுந்செய்திகள் மற்றும் பதிவுகள் அனுப்பப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.






தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ள சந்திரமௌலி குறிப்பிட்ட எண்ணில் இருந்து மோசமான பதிவுகள் வருவதாக ஒரு தொலைப்பேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார். ட்விட்டர் பதிவில் "இந்த பெருந்தொற்று காலத்தில் நான் இந்த தளத்தில் தமிழக காவல்துறையிடம் ஒரு உதவியை முன்வைக்கிறேன். என் மனைவியின் தொலைபேசி மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டிற்கு குறிப்பிட்ட நபரிடமிருந்து மிகவும் கீழ்த்தரமான, மோசமான பதிவுகள் வருகின்றன. இது குறித்து ஏற்கனவே சைபர் பிரிவில் புகாரை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.






அதை இணைத்து மற்றொரு ட்வீட்டை பதிவு செய்துள்ள அஞ்சனா, இரண்டு வருடங்கள் முன்பு இதேபோன்ற துன்புறுத்தல்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அஞ்சனா "இரண்டு வருடம் முன்பு இதேபோன்ற ஒரு கடுமையான காலகட்டத்தை கடந்தேன், அப்போது சைபர் பிரிவு மூலமாகவே தீர்வு கிடைத்தது. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது கவலையை அளிக்கிறது. நேரடியாக பல மோசமான குறுஞ்செய்திகள் எனக்கு அனுப்பப்படுகின்றன, அதை நான் பிளாக் செய்த பின்பும் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருப்பது பயமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.