கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 30 பேருக்கு மேலாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய கொடிய நோய்த்தொற்று தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த நோய் தாக்கம் தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் புகுந்து மக்களை கலக்கமடைய வைத்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது புதுச்சேரி மக்களை சற்று ஆறுதல் அடைய செய்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் மக்களை மீண்டும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதிசெய்யப்பட்டு தனியார் கண் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் தேவன் (67). இவரது மனைவி எழிலரசி வயது (62). இருவருக்கும் கடந்த 28-ஆம் தேதி கொரோன வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது எழிலரசிக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டதால், அவரை மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் கொரோனா பரவல் 50% குறைந்த நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்துள்ளது, இதனால் இவருடைய உயிரிழப்பு செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் உட்பட அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
ம்யூகார்மைகாசிஸ் (கருப்பு பூஞ்சை) நோயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி லைபோசோமல், ஆம்போடெரிசின் மருந்து வாங்க ரூ. 2.83 லட்சம் செலவின ஒப்புதலும், கொரோனா இரண்டாவது அலையைச் சமாளிப்பதற்கான குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் 214 சுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கருப்பு பூஞ்சை நோய் எதிர்கொள்வதற்கு புதுச்சேரி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்கு தேவையான மருந்துகளும் தற்போது கையில் இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வசதியாக இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்