ஆன்லைனில் ஆபாசமாக பேசிக்கொண்டே, யூடியுபில் பப்ஜி விளையாடும் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உறுதியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "மதன் மீது பலர் புகார் அளித்துள்ளனர், சைபர் பிரிவில் சமூக வலைத்தளங்களுக்கு என்று தனி பிரிவு உண்டு. அவர்கள் மதனின் யூடியுப் பதிவை ஆராய்ந்து சட்ட ரீதியாக ஆலோசனை மேற்கொண்ட பின்பு, தவறு நடந்திருப்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


மேலும் அறிய : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!


பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமாக யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து விளையாடியதோடு, ஆபாசம் நிறைந்த திமிர் பேச்சுகளை சிறுமிகளிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது போன்ற செயல்களை செய்த மதன் மீது பலர் புகார்களை முன்வைத்தனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஏற்கனவே மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக அவரின் யூடியுப் பதிவுகளை ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் சைபர் பிரிவு காவல்துறையும் இந்த விவகாரத்தில் விசாரணையை துவங்கி இருக்கிறார்கள், அதன் ஒரு பகுதியாக நாளை மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும் அவரது யூடியுப் பக்கத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலர் மதனின் தீவிர யூ ட்யூப் ஃபாலோவராகவும் இருக்கின்றனர். இப்படியாக சுமார் 8 லட்சம் பேர் மதனின் யூ ட்யூப் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இதில் பெரும்பாலும் இருப்பவர்கள் 18 வயதிற்கும் குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்தவர்கள். இவருடைய யூ ட்யூப் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைத்து வைத்துள்ள மதன், யூ ட்யூப் பக்கத்தில் ஆபாசமாக விளையாடுவது மட்டுமின்றி, சில சிறுமிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருமாறு அழைப்பதும், அங்கே அந்தரங்க பேச்சுகளில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.


மேலும் அறிய : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!


பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி கண்மூடித்தனமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், சிறுமிகள் பலரும் யூ ட்யூப் நேரலையில் ஆபாசமாக பேசும் அவலமும் இங்கே நடைபெற்று கொண்டு இருக்கிறது. தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் உள்ள சில ட்ரிக்ஸ் பற்றி பேச ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட மதனின் யூ ட்யூப் சேனல் இன்று தமிழ்நாட்டின் இளம் தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் பேரபாயமாக மாறியிருக்கிறது. இங்கே ட்ரிக்சைவிட மணிக்கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் அதிகமாக பேசப்படுகிறது. இந்நிலையில் விரைவில் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மதனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.