தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் இன்று பைக்கில் வந்த இருவர் ஆசிட் வீசியதில் 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறுமியின் முகத்தில் ரசாயனம் தெளித்து, கண்களிலும் புகுந்ததாக சிறுமியின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிறுமி, இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளார். போலீசார் இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி ஒருவர் சாலையோரம் நடந்து செல்கிறார்.


அப்போது ஒரு பைக் அந்தப் பகுதியே வருகிறது. அதில் இரண்டு இளைஞர்கள் உள்ளனர். ஒருவர் கண்ணாடியிலிருந்து திரவப் பொருளை 17 வயது சிறுமி மீது வீசுகிறார். அப்போது அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவதைக் காண முடிகிறது. நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "சிறுமி தனது முகத்தில் உள்ள ரசாயனத்தை கழுவ உதவிய பக்கத்து வீட்டுக்காரரிடம் ஓடினார்" என்று தெரிவித்தனர்.


"எனது மகள்கள், ஒருவருக்கு 17 வயது. மற்றொரு மகளுக்கு 13 வயது. அவர்கள் இருவரும் இன்று காலை ஒன்றாக வெளியே சென்றனர். அப்போது 2 இளைஞர்கள் எனது மூத்த மகளின் முகத்தில் திராவகத்தை வீசி விட்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் இருவரும் முகத்தை மறைத்து வைத்திருந்தனர்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்தார்.


இதற்கு முன் யாராவது தன்னை துன்புறுத்துவதாக மகள் உங்களிடம் கூறியிருக்கிறாரா என்று கேட்டோம். அதற்கு அவர், "இல்லை. அதுபோன்று கூறியிருந்தால் நானும் உடன் சென்று இருப்பேன்" என்று கண்ணீர் சிந்தியபடி தெரிவித்தார். அந்தப் பெண்ணின் தயாரும் இதையே வழிமொழிந்தார்.


திண்டிவனத்தில் டெஸ்ட் டிரைவ் செல்வதாக காரை திருடி சென்ற கில்லாடி திருடன் கைது


ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தினார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சிறுமிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தது.