தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 20 வயது நிரம்பியவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த சனிக்கிழமை மற்றும்  ஞாயிறுக்கிழமை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்த சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வு எழுதினார். சுமன் என்பவர் தற்போது சென்னையில் காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். தேர்வின் போது லாவண்யா கழிப்பறைக்கு சென்று உள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அவர் தேர்வு அறைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அறை கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.


 




மேலும், லாவண்யா இருந்த இடத்தில் வினாத்தாளும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் அவர் எழுதிய இருக்கையின் கீழ் சில துண்டு தாள்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த ஐஜி சத்திய பிரியா உத்தரவிட்டார். அதன் பெயரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தொடர்ந்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், தேர்வு மையத்திற்கு லாவண்யா செல்போன் கொண்டு சென்றதும் அதை பயன்படுத்தி வினாத்தாளை போட்டோ எடுத்து வெளியே அனுப்பி அதன் மூலம் விடைகளைப் பெற்று பூர்த்தி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு அவரது கணவர் சுமன் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. 


இந்த சம்பவதன்று துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் மற்றும் மாணவி லாவண்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ABP Nadu  செய்தி வெளியிட்டிருந்தது.


இந்த நிலையில், துணை ஆய்வாளர் சுமன் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகிய 2 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் "வாட்ஸ் அப்" மூலம் வினாத்தாளை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டதால் வினாத்தாள் யாருக்கு அனுப்பப்பட்டது என தீவிர விசாரணை நடைபெற்றது.


 




 


அப்போது விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் செங்கத்தைச் சார்ந்த மருத்துவர் பிரவீன் குமார் ஆகியோரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டது. அதன் பிறகு அதற்கான விடைகளை கூகுளில் தேடி சரியான பதில்களை வாட்ஸ் அப்பில் மீண்டும் லாவண்யாவிற்கு அனுப்பியது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் செங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரவீன் குமார் ஆகியவரை நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். தேர்வில் பிட்டு அடித்து விதிமீறலில் ஈடுபட்டதாக வெளியேற்றப்பட்ட லாவண்யாவின் கணவர் சுமன் சென்னையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஆனாலும் இவர் துறையின் முறையான அனுமதி பெறாமல் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் துணை ஆய்வாளருக்கான பணிக்கான போட்டித் தேர்வு எழுதி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவர் எதற்காக தேர்வு எழுதினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு கைது செய்யப்பட்ட சுமனின் சகோதரி சுபா திருவண்ணாமலை நகர ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். எனவே அவர் இந்த முறைகேட்டிற்கு ஏதேனும் உதவினாரா என அவரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருவண்ணாமலையில் துணை ஆய்வாளர் பணிக்காக போட்டி தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக இரண்டு துணை ஆய்வாளர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.