Aditya-L1 Mission: ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான உட்புற சோதனைகள் நிறைவடைந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்  படத்தை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது.


ஆதித்யா எல்1 விண்கலம்:


பார் போற்றும் வகையில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தை ஆராய தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து அடுத்த இலக்காக சூரியனை ஆராயும் நோக்கில், ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, வரும் சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 செயற்கைகோளை சுமந்துகொண்டு, பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. சூரியனை ஆராய்வதற்கு என இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளன. அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக பிரத்யேக செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் நாடு எனும் பெருமையை, ஆதித்யா எல்1 மூலம் இந்தியா பெற உள்ளது. 


தயார் நிலையில் ஆதித்யா எல்1:






இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சூரியனை ஆராயும் நோக்கில், ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான உட்புற சோதனைகள் நிறைவடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்  படத்தை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது. 


ஆதித்யா நோக்கம் என்ன?


பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். அதாவது 15 கோடி கிலோ மீட்டர் தூரமாகும். இந்த இலக்கை அடையும் அளவிலான அதிநவீன தொழில்நுட்பம் என்பது இதுவரை எந்த நாடும் கண்டறியவில்லை. எனவே, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம். செப்டம்பர் 2ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பயணித்து இலக்கை அடைய உள்ளது.


பயண திட்டம்:


ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்.  இந்த இலக்கை அடைய சந்திரயான் 4 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலம், 4 மாதங்கள் பயணித்து லெக்ராஞ்சியப் புள்ளி எனும் இலக்கை அடைய உள்ளது. அங்கு ஹாலோ ஆர்பிட்டில் ஆதித்யா எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு சூரியனின் மேற்பரப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை திரட்ட உள்ளது.