கோடி கோடியாய் அள்ளிச்சென்ற நிறுவனங்கள்
 
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம்,  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  


ரூசோ வால் சிக்கிய ஆர்கே சுரேஷ் 


குறிப்பாக இந்த வழக்கில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரூசோ என்ற நடிகர் கைது செய்யப்பட்ட பொழுது , நடிகர் ஆர் கே சுரேஷ் பற்றி  பல தகவல்களை வாக்குமூலமாக கொடுத்திருந்தார்.  நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி  இந்த வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளை தான் காப்பாற்றுவதாக கூறி  சுமார் 12.50 கோடி ரூபாயை   வாங்கியதாக ரூசோ  வாக்குமூலம் அளித்திருந்தார்.


 


 தலைமறைவான நடிகர் ஆர் கே சுரேஷ் 


 ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது கடந்த  இரண்டு மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


 


 நடிகரின் சொத்தை முடக்க திட்டம்


இந்தநிலையில் பலமுறை நடிகர் ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியும்  , இதுவரை நேரில் வந்து தன் தரப்பு விளக்கத்தை அளிக்காமல் இருந்து வருகிறார்.  இவர் துபாயில் பதுங்கி இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில் கூட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்,  ஆர்.கே.சுரேஷ்  உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒப்படைக்க துபாய் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்தநிலையில் சென்னையில் உள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷின் சொத்துக்களை முடக்க காவல்துறையினர் திட்டம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


 


அதிரடியாக ரிப்ளை கொடுத்த ஆர்.கே.சுரேஷ்
 
 
கடந்த மாதம் ட்விட்டரில், தனக்கு எதிராக ட்விட்டரில் பதிவு செய்த நபருக்கு ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகர் சுரேஷ், " நான் அப்படிப்பட்டவன் இல்லைபா, என்னை நான் நிரூபிப்பேன் நன்றி. எல்லா சமயத்தில்,  நான் மற்றவர்களுக்கு மட்டுமே உதவியிருக்கிறேன். தவறான செய்திகளை பார்க்க விரும்பவில்லை நண்பர்களே. என்னை நம்பிக் கொண்டே இருங்கள்" என ஆர்.கே.சுரேஷ் கையெழுத்து கும்பிட்டு தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை
 
முன்னதாக இந்த வழக்கில், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 23.34 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி 23.34 கோடி என்றாலும், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனரான ராஜசேகரின் 11 இடங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் அதன் மடிப்பு 8 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்துள்ளது. தொடர்ந்து இந்த சொத்துக்கள் நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டு, அவை ஏலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.