இந்தியா மீது கனடா பிரதமர் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என இலங்கை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 


காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய அதிகாரிகளின் பங்கு இருப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு அந்நாட்டு அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த இந்திய அரசு, கனடாவிற்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை முறைப்படி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.






இப்படி இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில்,  இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை அமைச்சர் பேசியுள்ளார். இலங்கை அமைச்சர் அலி சப்ரி, கனடாவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுபிடித்துள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் மூர்க்கத்தனமானவை என்றும், ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ட்ரூடோ ஏற்கனவே ஒருமுறை இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.  கனடா பிரதமர் ட்ரூடோவின் இந்த ஆதரமற்ற குற்றச்சாட்டு தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





மேலும், “ இரண்டாம் உலகப் போரின் போது கடந்த காலத்தில் நாசிகளுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு அவர் சென்று உற்சாக வரவேற்பு அளித்ததை பார்த்தேன். எனவே கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் கேள்விக்குரியதாக உள்ளது. கடந்த காலத்தில் நாங்கள் அதைக் எதிர்க்கொண்டுள்ளோம். சில சமயங்களில் பிரதமர் ட்ரூடோ மூர்க்கத்தனமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆச்சரியம் இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.






இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் மிலிந்த மொரகொடா கனடாவிற்கு இந்தியாவின் உறுதியான மற்றும் நேரடியான பதிலை ஆதரித்து, “இந்தியாவை நாங்கள் ஆதரிக்கிறோம். எனக்கு 60 வயது, எனது வாழ்நாளில் 40 ஆண்டுகள், இலங்கையில் பல்வேறு வகையான பயங்கரவாதத்தை எதிர்கொண்டுள்ளோம். பயங்கரவாதத்தால் பல நண்பர்களையும், சக ஊழியர்களையும் இழந்துள்ளேன். பயங்கரவாதத்திற்கு எதிராக துளி அளவும் சகிப்புத் தன்மையும் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை அமைச்சர் அலி அப்ரி, கனடா இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக முன்வைத்த குற்றச்சாட்டால் இரு நாடுகளிடையே இருக்கும் உறவை பாதித்துள்ளது என்றும் எந்த ஒரு நாடும் பிற நாட்டின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்த வேண்டும். நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் அமைதியான சூழலை உருவாக்க முடியும்" என பேசியுள்ளார்.  


இப்படி இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் விசாரணை தொடர வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எங்கள் கனடா நண்பர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் நாங்கள் பகிரங்கமாகவும் மற்றும் தனிப்பட்ட முறையிலும் - கனடா விசாரணையில் ஒத்துழைக்குமாறும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்” என கூறினார்.