ஆரணி நகராட்சியில் அசைவ உணவகங்கள் மற்றும் கடைகள் ஏராளமாக இயங்கி வருகிறது. அங்கு இயங்கி வரும் அசைவ உணவகங்களில் சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் பக்கோடா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரணியில் உள்ள பாளையத்தை சேர்ந்த பனிரண்டாம் வகுப்பு மாணவன் திருமுருகன். இவர் பொதுத்தேர்வு முடிந்து தன் நண்பர்களோடு ஆரணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் தேர்வு முடிந்த உற்சாகத்தில் சிக்கன் 65 சாப்பிட்டுள்ளார்.


 


 




 


சிக்கன் 65 சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவன் திருமுருகனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவனை சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். திருமுருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால், உடனடியாக திருமுருகனை வேலூர்  மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவன் திருமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர் மாணவனின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாணவனின் உயிரிழப்புக்கு கடையில் விற்கப்பட்ட தரமற்ற சிக்கன் 65-யே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அந்த கடையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிக்கன் 65 சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக ஆரணியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கு அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து, அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் சமையல்காரர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கடைக்கும் சீல் வைத்தனர்.


இதுகுறித்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது நீதிமன்றத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே அந்த பகுதியில் தரமற்ற உணவால் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் தற்போது இன்னொரு 12ம் வகுப்பு மாணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




 


ஆரணி பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் சிக்கன் கடைகளும், ஷவர்மா அசைவ உணவகங்களும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமற்ற கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகளையும், தரமற்ற எண்ணெய்களையும் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.  இதுமட்டுமின்றி, கெட்டுப்போன அசைவ உணவை மீண்டும் சூடாக்கி விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் முறையாக ஆய்வு நடத்தாமல் லஞ்சம் பெற்றுச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.