கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி அருகே உள்ள எலவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (52). ஊது பத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன் சசிக்குமார் (24). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வந்தார். அப்போது திருமண மண்டபத்தில் உறவினரின் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவர் சேலம் வந்து அவரை சந்தித்து உள்ளார்.




பின்னர் சசிக்குமார், தான் வெளி மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளதாகவும், மாணவியை காதலிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு அவர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு நாள் மாணவியை அவர் நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்து உள்ளார். இதையடுத்து சசிக்குமார் செல்போனில் மாணவியை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண படத்தை காட்டி தனக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே வீட்டில் உள்ள பணத்தை எடுத்து அனுப்ப வேண்டும். இல்லை என்றால் உனது நிர்வாண படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.


இதனால் பயந்து போன மாணவி ஆரம்ப கட்டத்தில் வீட்டில் இருந்த ஆயிரம், 2 ஆயிரத்தை எடுத்து அனுப்பி உள்ளார். பின்னர் அதிக பணம் வேண்டும் என்று சசிக்குமார் மிரட்டி உள்ளார். இதையடுத்து அவரது தாத்தா சேமித்து வைத்த பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் மாணவியின் தாத்தா 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வைத்திருந்த பணத்தை சரி பார்த்த போது அதில் பணம் குறைந்து இருந்ததை கண்டுபிடித்தார். பின்னர் மாணவியிடம் கேட்ட போது அவர் சரியாக பதில் கூறாமல் திணறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் செல்போனை பிடுங்கி பார்த்தனர்.




அதில் சசிக்குமாரின் செல்போனில் இருந்து மாணவியின் செல்போனுக்கு 40 ஆயிரம் தர வேண்டும். இல்லை என்றால் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தவாறு குறுஞ்செய்தி இருந்தது. இது குறித்து மாணவியிடம் கேட்ட போது சசிக்குமார், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும், நிர்வாண படத்தை காண்பித்து தன்னை மிரட்டி பணம் பறித்ததையும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.