ஃபான் இந்தியா மோகம்... தென்னிந்திய சினிமாக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாரியான உதாரணம், விக்ரம் ரோனா. வி.ஆர், என்கிறபெயரில் வெளியாகியுள்ள விக்ரம் ரோனா, கன்னட திரைப்படம். கன்னடத்திலிருந்து கே.ஜி.எப்., வெளியாகி பெரிய ஹிட் ஆன பின், அங்குள்ள பல முன்னணி நடிகர்களுக்கு தங்களுக்கு கே.ஜி.எப்., மாதிரியான வெளிச்சம் வேண்டும் என தோன்றியிருக்கும் என நினைக்கிறேன். 


அப்படி ஒரு முயற்சி தான் விக்ரம் ரோனோ. மலைமேல் ஒரு பயங்கரமான கிராமம். அங்கு அடிக்கடி குழந்தைகள் கொலையாகிறார்கள். அதற்கு காரணம், அங்குள்ள பிரம்மராட்சசன் என்கிறார்கள். மர்மமான அந்த கிராமத்திற்கு ஊர் பிரமுகரின் மகனாக ஒருவர் வருகிறார், இளம் பெண் ஒருவர் தன் தம்பியோடு வருகிறார், அதே போல், இன்ஸ்பெக்டர் ஒருவர் கொலையாக அந்த பணிக்கு மறுநாளே மற்றொரு இன்ஸ்பெக்டர் வருகிறார். 






இப்படி அடுத்தடுத்து கிராமத்திற்கு புதிய முகங்கள் வருகிறார்கள். கொலைகளும் தொடர்கிறது. பிரம்மராட்சசன் யார் என்பதை தேடும் இன்ஸ்பெக்டர் மீது முதற்கொண்டு சந்தேக வளையம் விரிகிறது. திரைக்கதையும் அப்படி தான் பயணிக்கிறது. இறுதியில், ட்விஸ்ட் ஒன்றை வைத்து, மர்ம முடிச்சுகளை அவிழ்கிறார்கள். 


உண்மையில் படத்தின் திரைக்கதையை விட கலை இயக்குனரின் பணி தான் பாராட்டும் படியாக உள்ளது. ஒரு மலைப்பகுதியில் அமேசான் காடு போன்று செட்டிங் போட்டு, அதை காட்சிக்கு காட்சிக்கு கார்ட்டூர் பட ரேஞ்சுக்கு கலர் புல்லாக காட்டிய வரை, கலை இயக்குனரின் பணி பாராட்டுக்குரியது.


அதற்கடுத்து இன்னொருவர் பாராட்டை பெறுகிறார். அது இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத். காட்சியை விட, வசனத்தை விட, அதிகமாக கேட்கிறது பின்னணி. சாதாரண காட்சியை கூட களேபர காட்சியாக காட்டும் பின்னணி இசையின் பின்னணியில், கேஜிஎப் ஃபார்முலா தெரிகிறது. குறிப்பாக கிச்சாவை காட்டும் ஒவ்வொரு காட்சியிலும், இசையமைப்பாளர் மெனக்கெட்டிருக்கிறார். 


இப்படி கலை மற்றும் இசையால் தூக்கி நிறுத்தப்படுகிறது விக்ரம் ரோனா. போலீஸ் அதிகாரியாக கிச்சா. மனிதருக்கு இவ்வளவு பில்டப் தேவையா என தெரியவில்லை. ஓப்பனிங் சீனில் தொடங்கி, எண்ட் கார்டு வரை கொஞ்சம் கூட குறையாத பில்டப். போலீஸ் அதிகாரி என்கிறார்கள்; ஒரு முறையாவது சீருடை அணிந்திருக்கலாம். சரி, போலீசிற்கான குறைந்த பட்ச உடல்மொழியாவது காட்டியிருக்கலாம். பிரம்மராட்சசனுக்கு இணையாக அவரும் ராட்சசனாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார். சீன் பை சீன் வாயில் சுருட்டு வேறு; காட்டில் வரும் புகை போதாதென்று, கிச்சா வேறு புகையை கக்கிக் கொண்டே இருக்கிறார். 






கதாபாத்திரங்களின் பெயர்களும், அவர்களின் நடிப்பும் கன்னட வாடையை பச்சையாக காட்டுகிறது. ஒருவழியாக சஸ்பென்ஸை திறந்த பின், கிச்சா சுதீஸ் மீது சரமாரி கத்திக் குத்து விழுகிறது. சரமாரி என்றால், 100 அல்லது 150 முறை கூட இருக்கும். சதக் சதக் சதக் என கிச்சாவை குத்திக் கொண்டே இருக்கிறார்கள். மனிதர், அதிலும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். பூதத்தை விட மோசமான பூதமாக இருக்கிறார். 


இப்படி ரியாலிட்டி குறைகள் குவிந்து கிடக்கிறது. இது பேய் படமா, திகில் படமா, க்ரைம் படமா, ஆக்ஷன் படமா என்றால், அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தூவியிருக்கிறோம் என்று தான் படத்தின் திரைக்கதை சொல்கிறது. என்ன புதிய முயற்சியை ட்ரை பண்ணாலும், ஒரு குத்துப்பாட்டு வைத்தே ஆக வேண்டும் என வைத்திருக்கிறார்கள். சரி அதாவது ராக்கம்மா என்று பெயர் இருக்கமா என்று பார்த்தால், ‛ரக்கம்மா...’வாம். என்னமோ போங்க, பெயரில் கூட வித்யாசம் காட்ட நினைத்தால் இப்படி தான்.  அப்பா... போதும்டா சஸ்பென்ஸ் என்கிற அளவிற்கு சஸ்பென்ஸ் மழை. தமிழ் மற்றும் கன்னடத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் விக்ரம் ரோனா, எதையாவது பார்க்க வேண்டும் என நினைத்தால், பார்க்கும் படம்.