கர்நாடகா மாநிலத்தில் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண் ஒருவருக்கு மிக மோசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் அவர் புகாரளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. பொருளாதார வசதி படைத்தவர்கள் பெரும்பாலனவர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த இந்திரா நகரில் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் பலரும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறுவர், சிறுமியர் விளையாடும் உபகரணங்களும் இருப்பதால் எப்போதும் பூங்கா மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இப்படியான ஒரு இடத்தில் அத்தகைய மோசமான சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் செய்த அநாகரீகமான செயல்
இந்த பூங்காவுக்கு கடந்த நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை காலையில் இளம்பெண் ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றிருக்கிறார். ஏற்கனவே அங்கு சிலர் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலையில் அப்பெண் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அவருக்கு பின்னால் வெகு நேரமாக இளைஞர் ஒருவன் பின் தொடர்ந்து வந்துள்ளான்.
ஆரம்பத்தில் பூங்காவுக்கு வந்தவர் என நினைத்தும், தன்னிடம் பாதுகாப்புக்காக நாய் இருந்ததாலும் அப்பெண் எதுவும் கண்டுகொள்ளாமல் தனது வேலையில் கவனம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத பூங்கா பகுதியில் சென்றபோது அந்த இளைஞன் அப்பெண்ணை ‘மேடம்’ என அழைத்துள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த பெண்
எதற்கு அழைத்தார் என முன்னே சென்ற அந்த பெண், திரும்பி பார்த்த நிலையில் அந்த இளைஞன் தான் யார் என கூறியதோடு மட்டுமல்லாமல், தனது ஆடைகளை அவிழ்த்து சுய இன்பம் செய்யத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக பயந்து போய் அந்த இடத்தை விட்டு வேகமாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தனது தோழியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
இருவரும் சற்றும் தாமதிக்காமல் இந்திரா நகர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பூங்கா பகுதியில் உள்ள மக்களிடமும், அங்கு தினசரி வருபவர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பூங்காவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.