கரூர் அருகே தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி அருகே உள்ள வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் நவீன் காந்த். வயது 18. இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் பயின்று வருகிறார். இந்நிலையில், குடும்பத்துடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள மலையம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்தனர். அப்போது, அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக நவீன் காந்த் சென்றபோது, இவருடன் பூஜேஸ் வயது 13, நிஷாந்த் வயது 9 ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பூஜேஸ் மற்றும் நிசாந்தை மீட்டனர். நவீன்காந்த் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்க: Kodanad Case: கோடநாடு வழக்கு: தொழிலதிபர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர், காவிரி ஆற்றில் இறங்கி நவீன் காந்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், நவீன் காந்தை சடலத்துடன் மீட்டனர். இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற நிலையில், நீரில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்