புதுச்சேரியில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகாம் மூலம் நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-24 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் இந்த நீட் தேர்வு காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, தேங்காய் திட்டு ஆச்சார்யா, வில்லியனூர் ஆச்சார்யா, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம், விவேகானந்தா சிபிஎஸ்இ, குழுனீ சிபிஎஸ்இ, பொறையூர் ஆதித்ய வித்யாஷ்ரம் உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடந்தன. புதுச்சேரியில் 5758 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையத்திற்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த தேர்வு மதியம் 2 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த புதுச்சேரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபியாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் பரிமளத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். நீட் தேர்வுக்குத் தயாரிக்க வந்த 18 வயதான ஹேமச்சந்திரன் நேற்று தேர்வு எழுத இருந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும், போலீசார் தரப்பில் கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஹேமச்சந்திரன் தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த அளவிலான மதிப்பெண் பெற்ற காரணத்தினால் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஆர்வமாகப் படித்து வந்துள்ளார். தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில் தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என சந்தேகம் உள்ளதாக கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்