கடந்த செப்டெம்பர் 10ஆம் தேதி, பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடிகள் காரணமாக பேசுபொருளாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
மோசமான ஏற்பாடு
கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 45 ஆயிரத்துக்கும் அதிகாமானோர் கலந்துகொண்ட நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு, குளறுபடி, ஏற்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டத்தில் நெருக்கடியடித்து மக்கள் அவதியுற்றதுடன், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் பல மணி நேரமாக உள்ளே செல்ல முடியாத நிலை, மற்றும் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது.
மேலும், தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக பல பெண்கள் இணையத்தில் பகிர்ந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் தொலைந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளும் வெளிவந்தன. செப்.10ஆம் தேதி மாலை இந்நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அன்று தொடங்கி இந்நிகழ்ச்சி பற்றி தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
ரஹ்மானுக்கு குவியும் ஆதரவு, கண்டனங்கள்
ஏ.ஆர்.ரஹ்மான் முன்னதாக இந்நிகழ்ச்சி பற்றி வருத்தம் தெரிவித்ததுடன், “அனைவரும் விழித்தெழ நானே பலியாடு ஆகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பங்கேற்பாளர்கள் சந்தித்த இன்னல்கள் பற்றி அவர் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றும், மக்களின் வலி புரியாமல் பதிவிட்டுள்ளார் என்றும் தொடர்ந்து விமர்சங்களை மக்கள் முன்வைத்து வருகின்றனர். மறுபுறம் திரைத்துறையினர் மற்றும் ஒருதரப்பு ரசிகர்கள் #WeStandWithARR எனும் ஹாஷ்டேகை பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பனையூரில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கேட்டதாக தற்போது காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
வெளியான கடிதம்
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏ.சி.டி.சி நிறுவனம், தாம்பரம் காவல்துறைக்கு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு, 20 ஆயிரம் கூடுவார்கள் என தெரிவித்து காவல்துறையிடம் அனுமதி கடிதம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் கூடுதலாக 21 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் 41 ஆயிரம் டிக்கெட் வரை விற்பனை செய்தது எப்படி என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் போலீஸாருக்கு தவறான தகவல் அளித்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடரும் விசாரணை
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கூட்டம் கூடியதால் அது தொடர்பான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு ஏற்பாட்டாளர்கள் வழங்கிய கடிதத்தில் 400க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குறைவான பாதுகாவலர்கள் பணியாற்றியதாலேயே இசை நிகழ்ச்சியில் இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Entertainment Headlines Sep 13: அசோக் செல்வன் - கீர்த்தி திருமணம்.. ரஜினிக்காக லோகேஷ் செய்யும் சம்பவம்... இன்றைய சினிமா செய்திகள்!