பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நேபாள நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை ஜாமீனில் விடுவிக்க நேபாள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அதிக பிணைத்தொகை அளிக்கப்பட்ட பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளார். அவர் நேபாள அணியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இதுவரை 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் 26 இருபது ஓவர் போட்டிகளிலும் அந்த நாட்டு அணிக்காகப் பங்கேற்றுள்ளார்.


மைனர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:


மைனர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தீப் இதை அடுத்து 20 லட்ச ரூபாய் ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளார். அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. என அவரது வழக்கறிஞர் சரோஜ் கிமிரே கூறியுள்ளார். 22 வயதான சந்தீப் மீதான இந்தக் குற்றச்சாட்டு வளர்ந்து வரும் நேபாள அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 






முன்னதாக நேபாளம் தொடர்பான அதிபயங்கரமான செய்திகள் இந்த ஆண்டில் வெளியாவது இது முதன்முறை அல்ல. புல்லிபாய் ஆப் விவகாரத்தில் கூட நேபாளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.  


புல்லிபாய் விவகாரம்:


இந்துத்துவாவாதிகளின் அடுத்த அராஜகமாக புல்லி பாய் ஆப் சமீபத்தில் தலை தூக்கியது. கடந்த ஒன்றாம் தேதி இஸ்லாமிய பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள், இஸ்லாமிய பெண் சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இவர்கள் ஏலம் விடப்படுவதாக  புல்லி பாய் எனும் செயலியில் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்ச்சையை உருவாக்கிய இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 


பூதாகரமாக இந்த விஷயம் மாறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செயலியின் நிறுவனர்கள் மீது மகாராஷ்டிரா,  உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


மும்பை இணைய குற்றப்பிரிவு காவல் துறையினர் இதுகுறித்து விசாரிக்கையில், பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.


இந்த சூழலில், பெங்களூரு விரைந்த மும்பை காவல் துறையினர் விஷால் ஜாவை கடந்த மூன்றாம் தேதி கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மும்பை இணைய குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரஷ்மி கரண்டிகர் 10 மணிநேரம் விஷாலிடம் விசாரணை நடத்தினார். 
அதில் இந்துத்துவா ஆதரவாளரான தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை ஏலம் விடுகிறோம் என்று அறிவித்ததாக விஷால் ஜா ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


மாஸ்டர்மைண்ட்:


அதுமட்டுமின்றி இந்தச் செயலியை விஷால் மட்டும் தனியாக நடத்தவில்லை. இதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படும் அவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கடந்த வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த இந்த 18 வயது பெண் பள்ளிப்படிப்பை முடித்து பொறியியல் படிப்புக்குரிய நுழைவுத் தேர்வு எழுத தயாராகிவருகிறார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் நண்பர் ஒருவர் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி அவர் இச்செயல்களை செய்து வந்துள்ளார். `கியூ' என அழைக்கப்படும் நேபாளத்தைச் சேர்ந்தவர் ‘புல்லி பாய்' செயலில் செய்ய வேண்டிய விஷயங்களை கட்டளையிட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர். தற்போது இந்த கியூவை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.


அதேபோல், உத்தரகாண்டை சேர்ந்த 21 வயது மாணவர் மயாங்க் ராவல் இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக  சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது