மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாளபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 63 வயதான பஷிர்அகமது. இவர் அதே பகுதியில் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அக்கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த 6 -ம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து கடையின் உள்ளே அழைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதனை தொடர்ந்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் மளிகை கடையில் நடந்ததை கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மகளிர் போலீசார் பஷிர்அகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்