சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வரலாறு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், நல்லதைக் கூட ஜாக்கிரதையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என கூறியுள்ளார். 


சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கே வரலாறு தெரியவில்லை என்றால் என்ன சொல்வது. அண்ணா, கலைஞர் தலைமையில் கட்டிக் காக்கப்பட்ட கழகம் இது. திமுக என்பது குடும்ப அரசியல் தான், அப்படி சொல்லும் நபர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா இந்த கழகத்தை தொடங்கிய போது அனைவரையும் தம்பி என அழைப்பார், யாராக இருந்தாலும் உடன்பிறப்பே என அழைத்து அந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே இது குடும்ப அரசியல் தான். கழக மாநாட்டை நடத்திய போது, குடும்பம் குடும்பமாக வாருங்கள் என கலைஞர் அழைத்தது உண்டு, மக்களும் குடும்பமாக வருவார்கள். மாநாட்டிற்கு மட்டுமல்ல சிறைக்கும் குடும்பமாக சென்றது உண்டு. பிரதமர் மோடி, திமுகவிற்கு வாக்களித்தால் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தான் வளர்ச்சியடையும் என பேசியுள்ளார், ஆனால் கலைஞரின் குடும்பமே தமிழ்நாடு தான். 


50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தது திராவிட இயக்கம் தான். தமிழ்நாடு வளர்ச்சியடைந்ததை கண்டு பிரதமர் பேச வேண்டும். இந்த வள்ர்ச்சிக்கு காரணம் கலைஞர் தான். அதற்கு சான்று தான் 6 வது முறையாக ஆட்சி அமைத்தது. பா.ஜ.க விற்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பீகாரில் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி” என கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “ மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. ஆனால் அந்த பக்கம் கூட போகவில்லை பிரதமர். 50 நாட்களுக்கு பின் தான் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். இது தான் பா.ஜ.க ஆட்சியின் லட்சனம். மத கலவரம் தூண்டி நாட்டில் வெற்றி பெறலாம் என மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் வரும் நாடாளுமன்றத்தில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழ்நாடு மக்கள் தயாராக, உருதியோடு இருக்க வேண்டும். மத்தியில் சிறப்பான, மதசார்பற்ற, மாநில உரிமைகளை கொடுக்கும் ஒரு ஆட்சியை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு பேசினார். 


இறுதியாக, பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும், தமிழன் என்ர உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என மணமக்களிடம் கேட்டுக்கொண்டார்.