ஆன்லைன் விளையாட்டுகள் இந்தியாவிற்கு ஏற்றது போல் இல்லை. வன்முறைகளையும், மனஅழுத்தையுமே உருவாக்கிறது என ஆன்லைன் விளையாட்டு குறித்து சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு ஆன்லைன் விளையாட்டு மோகம் மிகப்பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது.



கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் முடங்கியதால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் இருக்க வேண்டியதாக உள்ளது. இதில் பல மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் தான் அதிக ஈடுபாடு கொள்கின்றனர். இந்த செயல் ஒரு கட்டத்திற்கு மேல் போகும் போது தற்கொலையாக கூட மாறுகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த பள்ளி மாணவன் நீண்ட நேரமாக மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை, அப்பா திட்டியதால் ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் தன் மனைவியுடன் இணைந்து உணவுப் பொருள் சப்ளை ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களது மகன் ஜெயபிரசாத் (வயது 10) ஆணையூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் மாணவன் ஜெயபிரசாத் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் ஆன்லைன் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால்  தந்தை கண்டித்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத்  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

"இது மிகவும் வருந்தத்தக்க செய்தி. இன்று நம் சமுதாயம் எந்த அளவுக்கு மதுக்கு அடிமையாகியுள்ளதோ, அதே அளவு இன்றைய சிறுவர்களும் இளைஞர் சமுதாயம் மொபைல் போன் கேம் மற்றும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி உள்ளாகி இருக்கிறார்கள், என்பது நிதர்சனமா உண்மை. இந்த விரைவான உலகில் பெற்றோர்கள்  சம்பாதிக்கும் நோக்கில் சென்று கொண்டு இருப்பதால், பல சமயம் தங்கள் குழந்தைகளுக்கு உள்ள பிரச்னைகளை பார்க்க தவறிவிடுகிறார்கள் .இதனால் ஆரம்பத்திலேயே சரியாக வேண்டிய எந்தப் பிரச்னையையும் மிகவும் மோசமான நிலைமைக்குப் போன பிறகே அதற்கான தீர்வை தேடுகிறார்கள்.


அவர்களிடமிருந்து போனை பறிப்பதாலோ அல்லது பயன்படுத்துவதை தடுப்பதாலோ இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்காது. மாறாக , உங்கள் பிள்ளை உங்களிடம் கைபேசியை விளையாட கேட்கும் போது அதை சரியான முறையில் கையாள வேண்டும். ஒருவர் தன் பிள்ளை விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார் என்ன தெரிய வந்தால் , சரியான முறையில் அந்த விஷயத்தை கையாள வேண்டும். அவர்களுடன் பேசும் போது, உரையாடல்கள் நட்புடன் இருக்க வேண்டும் உரையாடல் மிரட்டுவது போன்றோ அல்லது அச்சுறுத்துவது போன்றோ இருக்கக்கூடாது.

 

அந்த விளையாட்டால் என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்பட்டு உள்ளன என அவர்களுடன் பேசவேண்டும். அந்த விளையாட்ட்டால் அவர் என்ன இழந்தார் அல்லது என்ன பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை உணர்த்த வேண்டும். 

பிள்ளைகள் இந்த மாதிரி விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளார்கள் என்று தெரிந்தால், உடனே மனநல ஆலோசகரிடம் அவருக்கு முறையான கவுன்சலிங்க்கும் கொடுக்கப்படவேண்டும்.  இவ்வாறு செய்தாலே போதும் அவர்கள் எதிர் காலம் காக்கப்படும்" என்கிறார் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திரபாண்டியன்.

 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.