“ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பிரியா வாரியர் இவர்,  அந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராயா பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்த பாடல் காட்சியில் ஒரு வரிக்கு இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இவர் கண்ணடிக்கும் காட்சி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது.


இதையடுத்து, அவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டாகினர். மேலும், அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் அவருக்கு வருகிறது. தற்போது, தெலுங்கு திரையுலகில் இஷ்க் நாட் எ லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.




இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக நடிகை ப்ரியா வாரியர் தனது நண்பர்களுடன் இணைந்து ரஷ்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, தனது நண்பர்களுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இந்த நிலையில், ப்ரியா வாரியர் வெளியிட்ட புகைப்படங்களில் அவரது புகைப்படத்தை மட்டும் தனியாக குறிப்பிட்டு சிலர் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதையறிந்த, ப்ரியா வாரியர் தனது கண்டனத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதில், அவர் கூறியிருப்பதாவது, “ எனது நண்பர்களுடனான பயணத்தின்போது நாங்கள் எடுத்த காணொலிகள் சமூக வலைதளங்கள் முழுவதும், என்ன? ஏது? என்று சரியான பின்னணி இல்லாமலே பகிரப்பட்டு வருகின்றன. அனைவரது அக்கறைக்கும் நன்றி. ஆனால், எனது சம்மதமின்றி அவற்றை என் நண்பர்கள் அவர்களின் பக்கங்களில் பகிரவில்லை என்பதால் இதுபற்றிய விவாதம் தேவையற்றது.




ஆனால், அந்த காணொலிகளுக்கு முட்டாள்தனமான பெயர்கள் வைத்து, அவை எங்கே எப்படி எடுக்கப்பட்டது என்ற பின்னணி ஏதும் இல்லாமல் வாட்ஸ் அப், யூ டியூப், டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உங்கள் பார்வையாளர்களுக்கு உண்மையான விஷயங்களை அடுத்த முறை தாருங்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக, என் நண்பர்களுடன் நான் என்ன செய்கிறேன், என் வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்பதெல்லாம் எனது தனிப்பட்ட விருப்பம். எனவே, உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கடந்த சில காலங்களாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக சிலர் தொடர்ந்து அவதூறு பரப்புவதையும், வதந்திகளை பரப்புவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.