திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இந்த வாலிபருக்கும், மற்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 2021 நவம்பர் 10-ந் தேதி திருமணம் நடந்தது. புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் சிறுமிக்கு அந்த வாலிபர் தாலி கட்டினார். பின்னர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். இந்த நிலையில் ஓரிரு வாரங்களில் பக்குவப்படாத வயதில் திருமண வாழ்க்கையை தொடங்கிய சிறுமிக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபர் சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து மணமகளாக சென்ற 20 நாட்களில் கணவரை பிரிந்து அந்த சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருவை சுமந்த அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனே அவரின் தாயார் இரவு 7 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கே டாக்டர் இல்லை. வெளியில் சென்றுள்ள டாக்டர் வருவதற்கு இரவு 10 மணி ஆகும் என அங்கு பணியில் இருந்த நர்சுகள் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வெளியே சிறுமி காத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனை அருகாமையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் சென்று சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.




பின்னர் குழந்தையை அங்கேயே அனாதையாக போட்டுவிட்டு தாயும் மகளும் தப்பிச் சென்றனர். இதற்கிடையே இரவு 10 மணிக்கு டாக்டர் மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் நோயாளியை தேடியபோது, பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் இருந்து சிசுவின் அழுகை சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் சமூக நலத்துறை அலுவலர் விஜயா, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற தவறான செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் குழந்தைகள் திருமணத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கடுமையாக சட்டங்களை விரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள், ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இன்றளவும் பல மாவட்டங்களில் குழந்தை திருமணம் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். எனவே முழுமையாக இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்க வைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண