மகாராஷ்ட்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் மஹைசலில் பகுதியில் மாணிக் மற்றும் போபட் யல்லபா வான்மோர் என்ற இரு சகோதரர்கள் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களில் மாணிக் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கடந்த ஜூன் 20 ஆம் தேதி இவர்களது வீடுகள் மர்மமான முறையில் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சாங்லி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.ஒரு வீட்டில் மாணிக், அவரது தாய், மனைவி, இரு குழந்தைகளும், இதேபோல் மற்றொரு வீட்டில் இருந்து போபட், அவரது மனைவி,இரு குழந்தைகள் ஆகியோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீக்ஷித் கெடம் தெரிவித்தார்.
மேலும் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் உண்மை என்ன தெரிய வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அதனைத் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சகோதரர்கள் இருவரும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றும், அதனை திரும்ப செலுத்த முடியாததால் இந்த குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியை கையில் எடுத்ததாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதில் அப்பாஸ் இறந்த குடும்பத்தினரிடம் மறைக்கப்பட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறி, அதனை கண்டுபிடிக்க ரூ.1 கோடி வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி புதையலை கண்டுபிடிக்காததால் வாங்கிய பணத்தை குடும்பத்தினர் திரும்ப கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அப்பாஸ் முகமது அலி பகவான் கடந்த ஜூன் 19 ஆம் தேதி புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என கூறி ஒவ்வொருவராக மாடிக்கு வரவழைத்து விஷம் கலந்த தேநீரை கொடுத்து கொலை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவம் அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்