தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் உப்புமேட்டுத்தெருவை சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் (40) இவர் திருவையாறில் சிடி, டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் ரீச்சார்ஜ் என மூன்று கடைகள் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சுதா (35) என்ற மனைவியும், சூர்யா (18), கோயம்புத்தூரில் பி.இ படித்துவருகிறார். சுதர்சன் (14) திருவையாறில் 9 ஆம் வகுப்பும், சுஜிதா (10) 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது, மகனும், மகளும் பள்ளிக்கு சென்ற நிலையில், கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ், தஞ்சாவூரில் உள்ள சுதாவின் தாயாருக்கு செல்போனில் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வாருங்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சுதாவின் தாயார் கிருஷ்ணவேனி, மகளை பார்ப்பதற்காக அவசரமாக, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு, மகள் வீட்டுக்கு சென்ற போது மகள் சுதா, மருமகன் சுரேஷ் ஆகிய இருவரும் தனித்தனியாக சேலையில் வீட்டில் தூக்கு மாட்டி இறந்துகிடந்தனர்.
உடனடியாக கிருஷ்ணவேனி அருகில் உள்ள வீடுகளில் தகவல் தெரிவித்தார். பின்னர் கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும், திருவையாறு போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, மருவூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்தண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று தடயங்களை சேகரித்தார். இது தொடர்பாக சுதாவின் தாய் கிருஷ்ணவேணி (55) கொடுத்த புகாரின்பேரில் மருவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இறந்துபோன சுரேஷ், சுதா ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மருவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில், தில்லைஸ்தானத்தை சொந்த ஊராக கொண்ட சுரேஷ், மூன்று கடைகளை திருவையாறில் வைத்துள்ளார். அனைத்து கடைகளிலும் பெண்கள் வேலைக்கு உள்ளனர். சுரேஷ் கடன்களை வாங்கி, சொகுசுசாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. சுரேஷிற்கும், மனைவி சுதாவிற்கும் கடந்த சில வாரங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது. வெளியில் செல்ல முடியாத பிரச்சனையால் சுதா தவித்து வந்துள்ளார். இதனால் தனது மகளை கோயம்புத்துாரில் படிப்பிற்காக சேர்த்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல், சுரேஷிற்கும், சுதாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த சுதா, முதலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த சுரேஷ், மனைவி துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டது வெளியில் தெரிந்தால், பிரச்சனை விபரீதமாகி விடுமோ என்ற பயத்தில், தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. இது குறித்து சுரேஷ்-சுதா தம்பதியினர் கடன் பிரச்சனையா அல்லது வேறு பிரச்சனையா என விசாரணை நடந்து வருகின்றது என்றார்.