பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை நேற்று 20.10.21 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த காவலர்களின் ஒழுங்கீன செயலுக்காக ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், பிரபு, வேல் குமார், ராஜ் குமார், நடராஜன், ராஜேஷ் குமார், கார்த்தி ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர்  நஜ்மல்  ஹோதா IPS அவர்கள் பணியிடை நீக்கம் செய்து 
உத்தரவிட்டுள்ளார்கள்.



கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 
சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2019ம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால் , பாபு ஆகிய 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை  தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த  அருண்குமார் என்ற நபர் 9 வது நபராக கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம்  தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் 21ம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட பக்கங்களின் நகல்கள் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.



இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்த காவல் துறை வாகனம் கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அங்கு காத்திருந்த குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை சந்தித்து உரையாடினர். முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறையை நோக்கி சென்றது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட சேலம் மாநகர ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,   இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும்  சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.