திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர். அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார். கோகுல் பாஜகவில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொன்னுசாமி இறந்து விட்ட நிலையில் அவரது சொத்துக்கள் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டது. பெருமாநல்லூரிலும், கோயமுத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டையிலும் 3 ½ ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது.
சிவக்குமாருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், விவாகரத்து பெற்ற அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் பெற்றோரின் சொத்துக்களை அம்பிகா குடும்பத்தினர் தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி அடிக்கடி சிவக்குமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேடபாளையத்தில் உள்ள தனது நண்பர் வடிவேல் என்பவரது வீட்டுக்கு சிவக்குமார் வந்துள்ளார். அங்கிருந்து மீண்டும் கிளம்பிய போது, அங்கு வந்த சிவக்குமாரின் தங்கை அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மூத்த மகன் கோகுல் மற்றும் சிலர் சிவக்குமாரை கட்டி வாயை மூடி காரில் வலுகட்டாயமாக ஏற்றிக் கொண்டு அறிவொளி நகரில் உள்ள அம்பிகா வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ள வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்ததாக கூறப்படுகிறது.
அடி தாங்க முடியாமல் சிவக்குமார் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிவக்குமாரிடம் ஸ்டாம் பேப்பரில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, பிரேஸ்லேட் 5 பவுண், கழுத்தில் அணிந்திருந்த செயின் 7 பவுண், மோதிரம் 1 1/4 பவுண், ரோலக்ஸ் வாட்ச் ஒன்றும்,பேக்கில் வைத்திருந்த பணம் ஒன்றரை இலட்ச ரூபாய் மற்றும் தெக்கலூரில் உள்ள வீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பறித்துள்ளனர். அதனை தொடர்ந்து இரண்டு கார்களில் சிவக்குமாரையும் ஏற்றி கொண்டு பெங்களூர் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சிவக்குமாரை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து பார்த்த போது சிவக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி உறவினர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில், அங்கு சென்றவர்கள் சிவக்குமாரை மீட்டு வந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்த சிவக்குமார் தன்னை கடத்தி தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மூத்தமகன் கோகுல் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல் துறையினர் கோகுல் மற்றும் வேலுச்சாமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அம்பிகா உள்ளிட்டோரை தேடி வந்த நிலையில், அறிவொளி நகரை சேர்ந்த ரியாஸ்கான் (36),சாகுல் அமீது(25), அஸ்ரப் அலி (29) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்