சென்னை பரங்கிமலையில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்ததில் காதலியை தொடர்ந்து காதலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை உள்ளகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே உள்ளகரத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படிக்கும் வயதில் காதல் செய்ய வேண்டாம் என கண்டித்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மன வேதனையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளங்கோவனுக்கு கடந்த வெள்ளிகிழமை பிறந்த நாள் என்பதால் 10ம் வகுப்பு மாணவியுடன் வெளியே சென்று பிறந்தநாளை கொண்டாடினர்.
அப்போது, தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நாம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். பின்பு, பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இருவரும் மின்சார ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் உயிருக்கு போராடிய இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் பிறந்த நாளில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். காதலியை தொடர்ந்து காதலனும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)