வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருப்பு பகுதியில் மற்றும் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். உடனடியாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மழை நீரை வடிய வைப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை  பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை என்பது பெய்து வந்தது.





திருவாரூர் பெரியக் கோயில் என்றழைக்கப்படும் தியாகராஜ சுவாமி திருக்கோயில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித்தேர் உலக புகழ் பெற்றது. பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட பரப்பளவில் பெரியது என்று கூறப்படுகிறது. எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதை அறிய முடியாத அளவிற்கு பழமையான கோயிலும் ஆகும். எனவே இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பரிகாரம் செய்வதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இங்கு வந்திருந்தனர். 





இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் திருவாரூரில் கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு கோபுர வாசல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிகட்டும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக திருவாரூர் தியாகராஜர் கோயில் ஊழியர்கள் கோயில் வளாகத்திற்குள் தேங்கியுள்ள மழை நீரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை நின்றதால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.