திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கி உள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது. அவரிடம் தொடந்து நடைபெற்ற விசாரணையில் 52 வயதான அருள் கொரடாச்சேரியை சேர்ந்த அமுல் தாஸ் என்பவரின் மகன் என்பதும், புலிவலம் வெள்ளைச்சாமி மகன் தமிழ்வாணன் (38), நாகப்பட்டினம் புதுச்சேரி மருதுவின் மகன் ராஜா என்கிற கரிகாலன் (34), நாகப்பட்டினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஈஸ்வரன் (20), நாகப்பட்டினம் மேல வெண்மணி விஸ்வநாதன் மகன் விஸ்வபாரதி (34)ஆகியோர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.
மேலும் காவல் துறையினர் இந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து கைதாகி உள்ள 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இந்த கும்பலால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் கள்ளநோட்டு புழக்கம் என்பது சமூகத்தில் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. தற்போது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு திருவாரூர் நகரப்பகுதியில் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது வணிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக டாஸ்மாக் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக வணிக நிறுவனங்களில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த கள்ள நோட்டு குமரி தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து இந்த கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டுமென திருவாரூர் நகர பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இந்த கள்ள நோட்டு கும்பல் எந்த இடத்தில் இந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்கின்றனர். எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இந்த கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள் என்றும், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.