3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக, கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேசன், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப கழக மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். 


கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று இரவு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விடிய விடிய விசாரணை நடத்திய பின், இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜி, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 


இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக கைதான 4 பேருக்கு பிணை கேட்டு, அவர்களின் வழக்கறிஞர்கள் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மீது IBC 212 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. காவல்நிலைய பிணையில் விட வாய்ப்புள்ள பிரிவு என்பதால், அவர்களுக்கு பிணை வழங்கிய போலீசார் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்த அந்த நான்கு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 


சிறை சென்ற ராஜேந்திரபாலாஜி:


இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற ஜாமின் மனு குறித்து எடுத்துரைத்து அவருக்கு ஜாமின் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.






தனக்கு ஏ கிளாஸ் அறை வழங்குமாறு ராஜேந்திரபாலாஜி வைத்த கோரிக்கை ஏற்கப்பட்ட, அவரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போலீசார் அவரை அலைக்கழிக்கும் விதமாக திருச்சி சிறைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். நேற்றிலிருந்து ஒரே ஆடையை மட்டுமே அணிந்திருந்த அவர், வழக்கமான தனது வேட்டி, சட்டை உடைக்கு மாறினார். பின்னர் போலீஸ் வாகனத்தில் ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட்டார். 


தொடர்ந்து இரண்டு நாட்கள் உறக்கம், ஓய்வு இல்லாத நிலையில், சிறை வாசலுக்கு வாகனம் வந்து, ராஜேந்திரபாலாஜி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை வீடியோ எடுத்த  போதும், அதை கூட அவரால் உணர முடியவில்லை. அந்த அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், ‛சார்... இடம் வந்திருச்சு இறங்குங்க...’ என்றார். திடீரென விழித்த ராஜேந்திரபாலாஜி, தன்னைச் சுற்றி கேமராக்கள் சூழ்ந்திருந்ததை சுற்றி சுற்றி பார்த்தார். அவர் எந்த ரியாக்ஷனும் தராமல், அனைவரையும் பார்த்து வணங்கினார். சிரித்தபடி அவர்கள் ஏதோ கேட்க வந்ததை கூர்ந்து கவனித்தார். ‛சார்... உங்களை கைது பண்ணியதை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது... அதை பற்றி என்ன சொல்றீங்க...’ என செய்தியாளர் ஒருவர் கேட்க, கூண்டு அடைத்த போலீஸ் வாகனம் உள்ளே இருந்த ராஜேந்திரபாலாஜி, சிரித்தபடி எதுவும் கூறாமல், கையை அசைத்துவிட்டு புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் வாகனத்திலிருந்து இறங்கிய அவர், சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். 


இதோ அந்த வீடியோ...








 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண