தமிழ் சினிமாவில் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் கோலோச்சியவர்கள் மிக சிலரே. அவர்களில் லிவிங்ஸ்டனும் ஒருவர். கன்னிராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய லிவிங்ஸ்டன் வானத்தை போல, வல்லரசு, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது சுந்தர புருஷன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கும் லிவிங்ஸ்டன் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தனது திரையுலக வாழ்வு குறித்தும், நடிகரானது குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசுகையில், “நான் சினிமாவில் கதாநாயகனாக ஆனது ஒரு பெரிய கதை. ஒரு லட்சியத்தால் வைராக்கியதால்தான் கதாநாயகனாக ஆனேன்.
நான், விஜயகாந்த் மற்றும் மூன்று பேர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது, ஹீரோவாக நடிக்க ஆசை இருக்கிறது என்பதை முதல்முறையாக சொன்னேன். உடனே அந்த மூன்று பேரும் பலமாக சிரித்துவிட்டார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது.
அவர்கள் மத்தியில் கூனிக்குறுகி அமர்ந்திருந்த என்னை கவனித்த விஜயகாந்த்திற்கு கண்கள் எல்லாம் சிவந்துவிட்டன. அதே கோபத்தோடு என்னை பார்த்து சிரித்தவர்களை முறைத்துவிட்டு இந்த மாதிரி நடந்துகொள்ளாதீர்கள் என்று அவர்களை திட்டினார்.
அந்த நிமிஷம், இவர்கள் முன் ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்ற வைராக்கியம் என்னுள் பிறந்தது. அதன்படி நடிக்கவும் செய்தேன்.
அதேசமயம் கதாநாயகன் இடத்தை தக்க வைப்பது எளிதானது அல்ல. உடம்பை பேணி பாதுகாக்க வேண்டும் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அதை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை” என்றார்.
மேலும் ரஜினி குறித்து பேசிய அவர், “ஒருமுறை நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சம் போல் எனக்கும் வேண்டுமென்றேன். அடுத்த முறை இமயமலை செல்லும்போது வாங்கிவருவதாக கூறினார். சொன்னதுபோல் வாங்கிவந்து என்னை அழைத்து அதை கொடுத்தார்.இந்த குணம் எல்லோருக்கும் வந்துவிடாது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: MK Stalin Assembly Speech | பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி