வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பிரபலமான தனியார் நகை கடை. தரைதளம் உட்பட 5 அடுக்குகள் கொண்ட நகை கடையில்  தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் வெள்ளி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாடிகளில் தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆய்வகமும், 5 வது மாடியில் நகை கடையில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள் இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்து  வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 



 

மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன், ASP ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் நகை முழுவதும் சென்ரலைஸ்டு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடையின் பின்பக்கம் உள்ள காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தலைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இந்த கோணத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 35 கிலோ வரையிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கடையில் உள்ள நகைகளை எடைபோடும் பணியையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இக்கொள்ளை சம்பவத்தை தொடந்து வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 



 

மேலும் நகை கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை போன நகை கடைக்கு அருகில் தடையங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து தெருக்கல், கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது. கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கடையின் உள்ளே கொள்ளையர்கள் நுழைந்ததாக கூறப்படும் வெண்டிலேட்டர் குழாய் வழியே ஒரு காவலரை உள்ளே அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.  கடையில் நேற்று நடைபெற்ற விற்பனை தொடர்பான ஆவணங்கள், நேற்று இருப்பு வைக்கப்பட்டு சென்ற நகைகள், தற்போது உள்ள நகைகளை ஒன்றிற்க்கு பல முறை கணக்கிடும் பணியில் DIG பாபு ஈடுபட்டுள்ளார். மேலும் மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காவல் துறையினரும் களத்தில் இறங்கி பலே கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். 

 



 

இந்த கொள்ளை சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணா கூறுகையில், நேற்று இரவு 12.00 மணி அளவில் கொள்ளையர்கள் நகை கடைக்கு பின்புறம் சிறிய துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். சிசிடிவி, மோப்ப நாய், கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளோம். அதன் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளது. 3 DSP, 1 ASP தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 குழுவும் வேவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உள்ள நகைகள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பின்னர் தான் எவ்வளவு நகை களவு போயுள்ளது என்பது தெரியவரும்.
  

 



 


வேலூர் நகை கடை கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை ஓரளவுக்கு அடையாளம் கண்டுள்ளோம். இதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பட்டியலை எடுத்துள்ளோம். 4 தனிப்படைகளும் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். குழு கிடைத்துள்ளது விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். நகை மதிப்பீடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் வெளியில் சென்றதை கண்காணிக்க தனியாக குழு அமைத்து பொது இடத்தில் உள்ள சிசிடிவிக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சிசிடிவியில் பதிவான உருவத்தை அடிப்படையாக கொண்டு தேடி வருகிறோம். உழியர்கள் அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். நகைகடைகள் உள்ளிட்ட முக்கிய கடைகள் உள்ளே மட்டும் சிசிடிவி பொறுத்தாமல் வெளிபுறமும் பொறுத்த வேண்டும். கொள்ளை நடந்த இக்கடையில் உள்ளே மட்டும் சிசிடிவி உள்ளது வெளிபக்கம் இல்லை இது காவல் துறை விசாரணைக்கு சிறிய பின்னடைவாக உள்ளது. சிசிடிவி பொருத்துவது தொடர்பாக அனைத்து கடைகளுக்கும் அறிவுரையை வழங்கி வருகிறோம் அதனை கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும்