தமிழகத்திலுள்ள கோயில்களில் உள்ள சிலைகள் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான சிலைகள் திருட்டு போனது. இதனையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார், திருட்டு போன சிலைகளை மீட்டும்,  பாதுகாப்பாற்ற நிலையிலுள்ள கோயில்களில் உள்ள சிலைகளை மீட்டு, பாதுகாப்பான மைத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உலோக திருமேனி பாதுகாப்பு மையம் என கோயிலின் மூலவர் சன்னதி அருகில் கட்டப்பட்டு, தற்போது திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை மீட்டு மையத்தில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.




கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகமான கோயில்கள் இருப்பதால், மேலும் சில உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்படவேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.அதன்படி தலா ரூ. 50 லட்சம் மதிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலிலும், திருநாகேஸ்வரம் கோயிலிலும் அனைத்து வசதிகளுடன் , நவீன முறையில் பாதுகாப்பான வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில்,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள,சிலைகள் பாதுகாப்பு மையத்தை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் ஒப்படைக்கப்படும் பல்வேறு கோயில்களின் ஐம்பொன் சிலைகள், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் செயல்படும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி முருகன், வெளி நாட்டிலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன.




இந்த பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக கோயில் ஊழியர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி. ஜெயந்த் முரளி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சிலைகள் பதிவேட்டின் படி சரியாக உள்ளதா ஆய்வு செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.




பின்னர்  ஜெயந்த்முரளி நிருபர்களிடம் கூறுகையில், சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகளில் 6 சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்படும் சிலைகள் உரிய கோயில்களில் ஒப்படைக்கப்படும். சிலை கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் துறையை பலப்படுத்த கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் உலோக  சிலைகள் பாதுகாப்பு  மையங்கள் தமிழகத்தில் மேலும் சில இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.