சேலம் மாநகர் அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் செல்வம். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவிக்கு ஆதார் கார்டு எடுக்க சேலம் சுகவனேசுவரர் கோவில் வணிக வளாகத்தில் உள்ள டிஜிட்டல் பிரிண்டிங் கடை வைத்திருக்கும் உறவினரான அம்மாப்பேட்டையை சேர்ந்த வினோத் குமாரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், செல்வத்தின் ஆதார் கார்டு மற்றும் அவரது மனைவியின் போட்டோ உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆதார் கார்டு எடுத்து தருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் கடந்த நிலையில் செல்வத்தின் ஆதார் கார்டை வினோத் குமார் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர், அந்த பிரிண்டிங் கடைக்கு சென்று மனைவியின் புதிய ஆதார் கார்டு என்னாச்சு? என்று கேட்டுள்ளார். அப்போது, வினோத்குமார் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த செல்வம் ஆதார் கார்டை வைத்து மோசடி சம்பவத்தில் வினோத் குமார் ஈடுபடுவது போன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சேலம் மாநகர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் சம்பந்தப் பட்ட அந்த கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்வத்தின் ஆதார் கார்டு முகவரியில் சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டை சத்தியா நகரை சேர்ந்த செந்தில் என்பவரின் போட்டோவை வைத்து புதிய ஆதார் கார்டை போலியாக உருவாக்கி வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த நூதன மோசடியில் வினோத் குமார், அவரது கூட்டாளியான யாதவ் காந்த், செந்தில் ஆகியோர் சேர்ந்து ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் 5 பிரிவின் கீழ் சேலம் மாநகர் டவுன் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் வேறுவகையில் ஏதேனும் மோசடி செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலி ஆதார் கார்டு தயாரித்து வாசனையில் ஈடுபட முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.