மூன்று நண்பர்கள் விபத்தில் சிக்கிய பின்னர், பலத்த காயமடைந்த தங்கள் நண்பரை டெல்லியின் ஷாஹ்தராவில் உள்ள பாதாள சாக்கடையில் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் தொடரும் குற்ற சம்பவங்கள்


தலைநகர் டெல்லியில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கொலை வழக்குகள் பெருமளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாளுக்குநாள் டெல்லி குறித்த க்ரைம் செய்திகள் புதிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இம்முறை மூன்று பேர் உடன் வந்த நண்பர் விபத்தில் காயமடைந்த நிலையில் அவரை பாதாள சாக்கடையில் வீசிச்சென்ற சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் நண்பரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்ய விரும்பாததால் அவரது உடலை பாதாள சாக்கடைக்கு உள்ளே வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.


ஆட்டோவில் செல்லும்போது விபத்து… காயமடைந்த நண்பரை காப்பாற்றாமல் பாதாள சாக்கடையில் வீசிச்சென்ற மூவர் கைது!


குற்றம் சாட்டபட்ட 3 பேர்


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பவன், 22, பிரிஜ் மோகன், 22, மற்றும் அவர்களுடன் ஒரு சிறுவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தலைநகர் டெல்லியின் சுந்தர் நாக்ரி பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பவன் மற்றும் பிரிஜ் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுவனை டெல்லி போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: RCB-W in WPL: பாக்கவே பாவமா இருக்கு.. இறுதிவரை போராடி 5வது தோல்வியை தழுவிய பெங்களூர்..! சோகத்தில் ஆர்.சி.பி. ரசிகர்கள்..!


பாதாள சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட உடல்


காவல்துறையினரின் கூற்றுப்படி, மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மரணம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்றும், ஜில்மில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர்தான் இறந்தவர் நிதீஷ் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.



ஆட்டோவில் சென்றபோது விபத்து


போலீஸ் விசாரணையில் உடனிருந்த நபர்களின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு டிசிபி ஜாய் டிர்கி கூறுகையில், “இந்த வழக்கின் விசாரணையில், மார்ச் 7-8 இரவு நிதிஷ் தனது நண்பர்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணித்தபோது, நந்த் நாக்ரி பகுதியில் வாகனம் கவிழ்ந்தது. அதில்  நிதீஷ் படுகாயம் அடைந்தார், பின்னர் அவரை அதே ரிக்ஷாவில் அவரது நண்பர்கள் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, பாதாளச் சாக்கடையில் வீசிச் சென்றுவிட்டனர்", என்று கூறியுள்ளார்.