ஒப்பந்தப்படி முறையாக வீடு கட்டி தராத கட்டுமான நிறுவனத்திற்கு 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

 


திருவாரூர் மாவட்டம் கீழக்காவதுகுடி ஊராட்சியில் உள்ள தேவகிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கு எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரராக இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த 2017 இல் புதிதாக இடம் வாங்கி தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜரத்தினம் திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் வசிக்கும் பொறியாளர் ரவீந்திரகுமாரின் கட்டுமான நிறுவனமான அம்மன் கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற நிறுவனத்தோடு 15 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வீடு ஒன்றை ஆறு மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது.

 

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஆறு மாதத்திற்குள் ரவீந்திரகுமார் வேலையை முடிக்காமல் மேற்கொண்டு இரண்டு லட்ச ரூபாய் தேவை எனவும் கூறியுள்ளார். அதையும் ராஜரத்தினம் கொடுத்துள்ளார். மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் வீட்டின் வேலையை முடிக்காமல் ரவீந்திரகுமார் தரப்பு இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 05.05.2018 ல் ராஜரத்தினம் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு ரவீந்திர குமார் தரப்பு வேலையை முடித்துக் கொடுத்துள்ளது. மொத்தமாக இந்த வீடு கட்டுவதற்கு அவர் 19 லட்சத்து 14,497 ரூபாய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

இந்த நிலையில், இந்த வீட்டில் ராஜரத்தினம் குடியேறிய 10 மாதங்களில் வீட்டின் தரைப்பகுதி உள்வாங்கி டைல்ஸ் உடைந்துள்ளது. இதுகுறித்து ரவீந்திர குமார் தரப்பிடம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி கேட்டபோது இதற்கு தாங்கள் பொறுப்பல்ல நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 20.09.2021-ல் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

 

இதனையடுத்து இதுகுறித்து ராஜரத்தினம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு அம்மன் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் வீட்டில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுமான நிறுவனம் சரி செய்து கொடுக்கும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படி நடந்து கொள்ளாதது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே வீட்டில் தரை பகுதியை சரி செய்வதற்கு மூன்று லட்ச ரூபாயும் ராஜரத்தினத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

 

மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்திற்குள் இந்த தொகையினை புகார்தாரருக்கு கொடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலதாமதமாகவும் மேற்கொண்டு இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டும் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.



 

இந்த வீட்டில் ராஜரத்தினம் குடியேறிய பத்து மாதங்களில் வீட்டின் தரை உள்வாங்கி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தொடர்ந்த வழக்கில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பாதிப்பை சரி செய்வதற்கு மூன்று லட்ச ரூபாயும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 2 லட்ச ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.