மகளிர் ஐ.பி.எல்., தொடரில் இன்று முக்கியமான ஆட்டத்தில் பெங்களூர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீசியது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஆர்.சி.பி. அணிக்காக டிவைன் – மந்தனா பேட்டிங்கைத் தொடங்கினர். தொடர்ந்து 4 போட்டிகளில் சொதப்பிய மந்தனா இந்த போட்டியில் மீள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


ஸ்மிரிதி மந்தனா 15 பந்துகள் ஆடி 1 பவுண்டரியுடன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டிவைன் – எல்லீஸ் பெர்ரி அதிரடியாக ஆடினர். டிவைன் 19 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த நைட் 11 ரன்களில் அவுட்டாக ரிச்சோ கோஷ், எலீஸ் பெர்ரி ஜோடி அதிரடி காட்டியது.




முதலில் நிதானமாக ஆடிய எல்லீஸ் பெர்ரி சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரிச்சா கோஷூம் அதிரடியாக ஆட பெங்களூர் ஸ்கோர் எகிறியது. அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்களில் அவுட்டாக, எல்லீஸ் பெர்ரி 52 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.


151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்காக வலுவான ஃபார்மில் இருந்த ஷபாலிவர்மாவை முதல் ஓவரின் 2வது பந்திலே டக் அவுட்டாக்கினார் மேகன். அடுத்து அதிரடியாக ஆடிய ஆலீஸ் கேப்சியை பீரித்தி போஸ் 38 ரன்களில் அவுட்டாக்க, கேப்டன் மெக் லேனீங் 15 ரன்களில் அவுட்டானார். 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணிக்காக ஜெமிமா சற்று அதிரடியாக ஆடினார். அவர் 28 பந்தில் 3 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.




14.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்திருந்தது. கடந்த போட்டிகளை காட்டிலும் இந்த போட்டியில் பெங்களூர் அணி சிறப்பாக பந்துவீசியதால் இந்த போட்டியில்  வெற்றி வாய்ப்பு தெரிந்தது. போட்டி விறுவிறுப்பாக சென்றபோது மாரிஜானே காப் – ஜெஸ் ஜோடி ஆட்டத்தை டெல்லி பக்கம்  கொண்டு வந்தது. குறிப்பாக, ஜெஸ் பவுண்டரிகளாக விளாசினார். அவர் 4 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் 15 பந்தில் விளாசி 29 ரன்கள் எடுத்தார். இதனால், டெல்லி அணி ஆட்டம் முடிய 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.


இதனால், பெங்களூர் அணி தொடர்ந்து தனது 5வது தோல்வியை பதிவு செய்தது. பெங்களூர் அணி வெற்றியின் அருகில் வரை சென்று தோல்வியை தழுவியது மீண்டும் ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.