தஞ்சை மாவட்டம் நல்லிச்சேரியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வரும் போது பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதியதில் மாணவி மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார். மாலையில் விஷாலியை வீட்டிற்கு அவரது சித்தப்பா செங்குட்டுவன் என்பவரின் மகன் பிரதீப் (26) என்பவர் பைக்கில் அய்யம்பேட்டைக்கு சென்று அழைத்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது நல்லிச்சேரி பகுதியில் ஒரு வளைவில் பிரதீப் வேகமாக பைக்கை திருப்பி உள்ளார். இதில் பைக் நிலைதடுமாறி சாலையோரத்திலுள்ள மரத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விஷாலி மற்றும் பிரதீப் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அய்யம்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் அருகே கெழுத்தியூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சுபிக்ஷா (11) அரசு பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் வீட்டில் மதியம் 3 மணி வரை விளையாடிக்கொண்டிருந்தார்.
அதன்பிறகு வெளியே சென்ற சுபிக்ஷா இரவு 9 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, பந்தநல்லுார் போலீசில் குமார் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குமார் வீட்டின் அருகே பழவாறு வடிக்கால் வாய்க்காலில் சுமார் 10 அடி ஆழம் அளவிற்கு தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கிய இறந்த நிலையில் சுபிக்ஷா உடல் மீட்கப்பட்டது. இது அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து போலீசார் சுப்கிஷா உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுபிக்ஷா தண்ணீர் மூழ்கி இறந்து எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் தஞ்சை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.