நெல்லை மாநகர பகுதிகளில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரப் பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சோதனையின் போது விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் போலீசார் அதிக அளவு அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் ஆர்டிஓ வுக்கு அவர்களது லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் தனது ஹெல்மெட்டில்  கேமராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற அந்த வாலிபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோரும் விரைந்து வந்தனர். அப்போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தார்.




பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாநகரில் சில இளைஞர்கள் இரு சக்கர வாகன ரேஸ் செய்வதாக  தகவல் கிடைத்தது. குறிப்பாக சமூக வலைதலங்களில் வீடியோவாக பதிவிட்டு உள்ளனர். அதன் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டதில் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. மீதி வாகனங்களை கைப்பற்றுவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் வாகன உரிமம் இன்றி 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாரும் அதற்கு பொறுப்பு. மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். அதே போல இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.  மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். விபத்தில் சிக்கிய நபர் காயம் அடைந்து இருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 308 கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.  தொடர்ந்து மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று  சாகசத்தில் ஈடுபடுவது கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இது தவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதில் புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம். இது தவிர புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண