நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை கிராமத்தில் கடந்த 10 ஆம் தேதி மாலை கடல் அரிப்பால் 30 மீட்டர் தூரம் வரையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. குறிப்பாக அங்கிருந்த மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது.  கடல் அரிப்பால் கடற்கரையில் நாட்டுப்படகுகளை   நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தீடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கடலில் இறங்கியும், மணல் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் நின்றும் கைகளை கோர்த்தவாறு கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். நேற்றைய தினம் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மீனவ பிரதிநிதிகளுடன் சென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து  தூண்டில் வளைவு அமைப்பதற்கான தேவையை எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவேன் என்றார்.




இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக மீனவர்கள் படகில் கருப்பு கொடி கட்டி கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கூடுதாழை கடற்கரை கிராமத்தில் தொடர்ந்து கடல் அலையின் வேகத்தால் கரைகள் அரிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தங்களுக்கு தூண்டில் வளைவு வேண்டும் என்றும் கடந்த 22 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். இது தொடர்பாக பல ஆண்களாக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.  மிகப்பெரிய ஆபத்தான  சூழலில்  நாங்கள் இருக்கின்றோம், பொருள் சேதம், உயிர் சேதமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை மீன்வளத்துறை அமைச்சர் வந்து பார்வையிடாதது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. மத்திய  மாநில அரசு என எந்த அரசும் தங்கள் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதனால் மூன்றாவது நாளான இன்று படகுகளில் கருப்பு கொடிகளை கட்டி படகில் கடலுக்குள் சென்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். எனவே  தூண்டில் வளைவு அமைக்க அடிக்கல் நாட்டு வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். மேலும் நாளை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில்  ஈடுபட போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண