மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. மயிலாடுதுறை அருகே புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அமைந்துள்ளதால் அங்கிருந்து தொடர்ந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது கடத்தலையும், விற்பனையும் தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.




மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து இருபத்தி நான்கு மணி நேரமும் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டாலும், ஒரு சில மது கடத்தல் காரர்கள் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாகவே மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கடத்தல்காரர்களுக்கு துணை போவதும் இந்த வெளிமாநில மது கடத்தலை தடுக்க முடியாது அதற்கு முக்கிய காரணமான பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி அக்ரகாரம் தெருவில் பல மாதங்களாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த தெருவில் வசிக்கக்கூடிய ராஜேந்திரன் , சாவித்திரி தம்பதியினர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுவை வாங்கி வந்து பதுக்கி வைத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விற்பனை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதியினர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மணல்மேடு காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் படுஜோராக மது விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.




காலை முதல் இரவு என இங்கு 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்வதை தடுக்க  காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக அவ்வப்போது வீடியோ வெளியானதும், அதனைத் தொடர்ந்து கண்துடைப்புக்காக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தரமாக இதனை தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற