முதல் மனைவியை விவாகரத்து செய்த டி.இமான் மறுமணம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மறுமண செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஞாயிறு அன்று மறைந்த பிரபல கலை இயக்குனரான உபால்ட் என்பவரின் மகள் அமலியை நான் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய கடினமான தருணங்களில் என்னுடன் ஆதரவாக இருந்த எனது தந்தைக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
சவால்களில் உறுதுணையாக இருந்த தந்தை
கடந்த சில வருடங்களாக நானும் எனது குடும்பமும் சந்தித்த சவால்களுக்கெல்லாம் இது தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். எனக்கு அமலியை அறிமுகப்படுத்தி இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இதுதான் என்னுடைய மூன்றாவது மகள்
அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் என்னுடைய சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்ததை அளித்திருக்கிறது. அவர்களை இந்த தருணத்தில் நான் மிஸ் செய்கிறேன். இருந்த போதிலும் அவர்கள் என்னிடம் விரைவில் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பேன்.
நான், என்னுடைய மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்களது உறவினர்கள் ஆகிய அனைவரும் எனது மகள்கள் வந்தால் அவர்கள் மீது அன்பை செலுத்த காத்திருக்கின்றோம். அமலி குடும்பம் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு என்னுடைய நன்றிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து செய்த டி.இமான்
முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு இசையமைப்பாளர் டி.இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர் கடந்தாண்டு இறுதியில் விவகாரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவகாரத்து அப்போது திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்திற்கு பிறகு டி. இமான் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வருவதாகவும், இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வருவதாகவும் செய்திகள் பரவியது. இந்தநிலையில், தற்போது டி. இமான் எமிலி என்ற பெண்ணுடன் மறுமணம் செய்துள்ளார். பல திரைபிரபலங்கள் தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.