சமூக வலைதளங்கள் மூலமாக பல நன்மைகள் உண்டு என்றாலும், விழிப்புணர்வோடு இல்லை என்றால் சமூக வலைதளங்கள் நமக்கு எதிராகவும் போகக்கூடும். இதற்கு  எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் காதலனை நம்பி தனியாக சென்ற பெண்ணை காதலனின் நண்பர்கள் 25 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் பணி நிமித்தம் காரணமாக ஹரியானாவின் எல்லையில் டெல்லிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்துள்ளார். 22 வயதான அப்பெண்ணுக்கு, 23 வயதான சாகர் என்ற பையனுடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் சேட் செய்து நண்பர்கள் ஆன நிலையில் செல்போன் எண்களையும் பரஸ்பரமாக பகிர்ந்துகொண்டுள்ளனர். 




பின்னர் இவர்கள் செல்போனில் பேசியே பழகியுள்ளனர். பின்னர் தன்னுடைய காதலை தெரிவித்த சாகர், தன் பெற்றோரை சந்திக்க நேரில் வரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி ஹரியானாவில் உள்ள கோடல் பகுதிக்கு மே 3ம் தேதி சென்ற  பெண் சாகரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். வீட்டிற்கு அழைத்துச்செல்வான் என எதிர்பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் நேராக அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளான் சாகர். அங்கு ஏற்கெனவே சாகரின் சகோதரனும் அவரது நண்பர்கள் கூட்டமும் இருந்துள்ளது.  20க்கும் மேற்பட்டவர்கள் அந்த இளம்பெண்ணை இரவு முழுவதும், அடுத்த நாள் பகலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 




பின்னர் இளம்பெண்ணை அப்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். கிட்டத்தட்ட 9 நாட்கள் பிறகு அதிர்ச்சியில் இருந்து மீண்ட இளம்பெண், மே12ம் தேதி ஹசான்பூர் காவல்நிலையத்திற்கு சென்று 25 பேர் புகார் அளித்துள்ளார். இளம்பெண்ணின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். பின்னர் முக்கிய குற்றவாளியான சாகரை காவல்துறை கைது செய்துள்ளது. மற்றவர்களை கைது செய்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. சாகரிடன் விசாரணை நடத்தப்பட்டு மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாமல் பழகும் நபர்களை நம்பி அந்தரங்க விஷயங்களை பகிர்வது, செல்போன் எண்களை தருவது, பணம் கொடுத்தல் போன்ற விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது என்றும், சோஷியல் மீடியாவை விழிப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தேசிய அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வு அளித்து வந்தாலும் இளம் பெண்கள் எளிதில் ஏமாந்து இது போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாக உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அதிக அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். எப்போது தான் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்.