சிலருக்கு கொரோனா வந்துவிடுமோ என அச்சம், இன்னும் சிலருக்கு கொரோனா வந்துவிட்டதே என அச்சம். ‛தினம் அச்சப்பட்டு வாழும் வாழ்க்கை எதற்கு,’ என்ற பாடல்வரிதான் நினைவுக்கு வந்து செல்கிறது.

உலகமே ஒரு பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் அனைவருமே போராளிகள் தான் என்ற எண்ணத்துடன் துணிவை வரவழைத்துக் கொள்வதே முதல் அருமருந்து.

அப்படியான எண்ணமும், வாழ்ந்தாக வேண்டும் என்ற வாழ்க்கையின் மீதான பிடிப்பும்தான் 96 வயது புஷ்பா சர்மாவை கரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளது.

 



 

டெல்லியைச் சேர்ந்தவர் புஷ்பா சர்மா (96). தனது மகன் அருண் குமார் (67), மருமகள் மீனா (64) ஆகியோருடன் நவீன் ஷ்ரத்தா பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் மகன், மருமகளும் தொற்றுக்குள்ளானார்கள். ஆனால், மே 9ம் தேதியன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் புஷ்பா சர்மா பூரண நலத்துடன் இருப்பது தெரியவந்தது.

மொத்த குடும்பமும் எப்படி கொரோனாவை வென்றது? அதுவும் குறிப்பாக தனது 96 வயது பாட்டி புஷ்பாவின் துணிச்சல் பற்றி பேரன் குனால் (35) கூறுகிறார். குனால் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இருக்கிறார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில் கூறியவை உங்களுக்கு வியப்பளிக்கலாம், 

 

‛‛டெல்லியில் இரண்டாவது அலை கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே எங்கள் அனைவருக்கும் பீதி ஏற்பட்டிருந்தது. அன்றாடம் வரும் செய்திகளும், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறையும் மனதில் இறுக்கத்தைக் கொடுத்திருந்தது.

எங்கள் பயத்தைக் கூட்டுவது போல் கொரோனா ஆட்கொண்டது. நான், எனது மனைவி, அம்மா, அப்பா, பாட்டி என அனைவருக்கும் கோவிட் பாசிட்டிவ். பாட்டிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், அவர் தனது காய்ச்சல் பற்றியோ உடல் வலி பற்றியோ எதுவும் புலம்பவில்லை. அவருக்கு சி ரியாக்டிவ் புரோட்டீன் எனப்படும் , சிபிஆர் பரிசோதனை மேற்கொண்டோம்.



 

அதில் 82 புள்ளிகள் காட்டியது. இது நோய்த்தொற்று மிகவும் அதிகமாக இருப்பதற்கான அறிகுறி. எனக்கு மட்டுமல்ல என் வீட்டில் அனைவரும், எங்கள் குடியிருப்புப் பகுதியில் அனைவருமே சாய்ஜி (பாட்டியை செல்லமாக அப்படித்தான் குனால் அழைக்கிறார்) பற்றி கவலை கொண்டோம்.

ஆனால், எப்போதும் வீல் சேரில் அங்குமிங்கும் சுழன்று கொண்டிருக்கும் சாய்ஜி படுக்கையில் அமைதியாக இருந்தார். ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அதுதான் அவரை இன்று மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

 

வீட்டில் அப்பாவும், அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பரவாயில்லை நாம் நேர்மறை சிந்தனைகளை கைவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். விளைவு இன்று வீட்டிலிருந்தபடியே கரோனாவை வென்றிருக்கிறோம். 

சாய்ஜியின் போராட்டத்திலிருந்து நாம் அனைவரும் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டால் உடனே பதற்றமடையக் கூடாது. மருந்துகளை உட்கொண்டு போராட வேண்டும். இன்று சாய்ஜியைப் பார்த்து எங்களின் குடியிருப்புப் பகுதி முழுவதுமே புது உத்வேகத்துடன் இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரின் வாட்ஸ் அப்பில் இன்றளவும் வாழ்த்துக் குறிப்புகள் குவிகின்றன,’’ என்று குனால் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

ஆகையால் கரோனா அச்சம் உங்களைத் துரத்தும் போதெல்லாம் புஷ்பா சர்மாவின் வெற்றிக் கதைகள் போன்ற பல உத்வேகக் கதைகளைப் படியுங்கள். நான் போராடித்தான் ஆகவேண்டும். அதற்குத் துணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், எப்போதும் மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி சோபு கொண்டு கழுவுதல் போன்ற பேராயுதங்களை எடுத்துக் கொள்வோம்.