திருச்சி மாநகரில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாலிபர்கள், சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் குற்றங்களும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆகையால் திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது போதை ஊசி , போதைமருந்து விற்பனை செய்பவர்களை கைது செய்து, அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகிறார்கள். இருப்பினும் போதை மருந்து விற்பனை குறைந்தபாடில்லை. இந்தநிலையில் திருச்சி பாலக்கரை செங்குளம்காலனி பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரி நைமுன்பீவிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் இதுபற்றி பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் செங்குளம் காலனிக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

 



 

இந்நிலையில், அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகில் 2 வாலிபர்கள் போதை மாத்திரையை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பாலக்கரை காஜாபேட்டையை சேர்ந்த விமல்ராஜ் (வயது 26), ஆட்டுக்கார தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (27) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையில், மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரையை போதைக்காக வேதி உப்புநீரில் (ஷலைன்) கலந்து அதை ஊசி மூலம் உடலில் செலுத்திகொண்டால் போதை இருக்கும் என்று கூறி சிறுவர்கள் மற்றும் வாலிபர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 'நைட்ரோசன்10' என்ற 19 போதை மாத்திரைகள், 100 மி.லி. ஷலைன், 2 ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண