சென்னை கொடுங்கையூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 3 பைக்குகள்  திருடு போயின இது குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் கொடுங்கையூர் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேர் திருடு போன 3 இடத்திலும் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தனர். ஒரே கும்பல்  பைக்குகளை  குறிவைத்து திருடுவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

 

இதனை அடுத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் 19 என்ற நபரை கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல  தகவல்கள் வெளிவந்தன  முகமது சாதீக் தனது உறவினரான முஷ்ரப் என்பவருடன் சேர்ந்து சென்னையில்  பைக்குகளை திருடி அதனை ஆந்திரா எல்லைப் பகுதியில் தனது மற்றொரு உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் 20 என்ற நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் இவர்கள் சென்னைக்கு வந்து விடுவது வழக்கம் அந்த நபர் ஆந்திராவிற்கு பைக்குகளை கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்று பணத்தை மூன்று பேரும் பிரித்துக் கொள்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

 

இதனை அடுத்து முகமது சித்திக் கொடுத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் ஆந்திரா சென்று இம்தியாசை கைது செய்தனர். மேலும் ஆந்திராவிலிருந்து 11  பைக்குகளை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை திருடி அதனை வெறும் 8,000 ரூபாய்க்கு ஆந்திராவில் விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இம்தியாஸ் , முகமது சித்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முஷ்ரப் என்ற நபரையும் தேடி வருகின்றனர்.

 



வீட்டு வாசலில் மது குடித்ததை தட்டிக் கேட்ட கணவன் மனைவியை தாக்கிய 2பேர் கைது



சென்னை ஓட்டேரி பாஷ்யம் முதல் தெருவை சேர்ந்தவர் டில்லி பாபு (59). இவர் சொந்தமாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். டில்லிபாபு தனது மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் இரண்டு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே டில்லி பாபு ஏன் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மது அருந்திய இரண்டு இளைஞர்களும் டில்லி பாபுவின் முகத்தில் பலமாக தாக்கி உள்ளனர்.  தடுக்க வந்த அவரது மனைவியை யும் தாக்கியுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இரு வரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 

இதில் டில்லி பாபுவிற்கு மூன்று பற்கள் உடைந்து வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஓட்டேரி சூளைமேடு தெரு பகுதி யை சேர்ந்த பாலாஜி வயது 32 மற்றும் அவரது தம்பி மணிகண்டன் வயது 26 ஆகிய இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த ஓட்டேரி போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அண்ணன், தம்பி இருவரையும் நீதிமன்றத்தில ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.