நடிகைகள் மாடல் என இளம்பெண்களின் மரணங்கள் கொல்கத்தா பகுதிகளில் தொடர்கதையாகிவிட்டது. முன்னதாக இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் அந்த பகுதியில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நான்காவதாக இளம் மேக்கப் கலைஞரும் மாடலுமான சரஸ்வதி தாஸ் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது :
சரஸ்வதி தாஸ் சனிக்கிழமை இரவு கஸ்பா பகுதியில் உள்ள பெடியடங்கா வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். சரஸ்வதி தாஸின் அம்மாவும் அப்பாவும் அவர் குழந்தையாக இருந்த பொழுதே பிரிந்துவிட்டனர். மேலும் அவர் அம்மா, பாட்டி அரவணைப்பில்தான் வளர்ந்திருக்கிறார். மேக்கப் மற்றும் மாடலிங்கில் ஆர்வமுள்ள சரஸ்வதி , தனது பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கும் டியூஷன் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சம்பவம் நடந்த அன்று சனிக்கிழமை . சரஸ்வதி தாஸின் அத்தையும் , அம்மாவும் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து பாட்டியுடன் படுத்திருந்த சரஸ்வதி தாஸ் வேறு ஒரு அறைக்கு சென்று , அங்கு தனது துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார். இரவு 2 மணி ஆகியும் பேத்தியை காணாத பாட்டி மற்றொரு அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே பாட்டியில் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சரஸ்வதி தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி தாஸ் தற்கொலை மரணம் குறித்து எங்களுக்கு திங்கள் கிழமை புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை தனது காதலடன் மொபைலில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். காதல் தோல்வியா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றோம்,தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்றார் கொல்கத்தாவில் முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, கொல்கத்தாவில் உள்ள தனது அறையில் மாடல் அழகி மஞ்சுஷா (26) தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
புதன்கிழமையன்று அவரது தோழியும் சக ஊழியருமான பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்பட்டது. இதேபோல நடிகை பல்லபி டேயும் மே 15 அன்று அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அதே துறையை சேர்ந்த நான்காவது பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது காவல்துறையின் கோணத்தை மாற்றியிருக்கிறது. இவர்கள் நான்கு பேருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா ? இந்த தற்கொலை மரணங்களுக்கு பின்னால் ஏதேனும் பொதுவான காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)